வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்திச் செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்று (11) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர்
பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோ மீற்றர்
நீளத்துக்கு இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. துரித கதியில்
முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வீதிப் புனரமைப்புக்கான பெயர்ப்பலகையை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்து, நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன்,
எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஷ்,
யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
மாகாணப் பணிப்பாளர் குரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

