மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் தொட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக்
குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், அதற்கான பணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்கு உள்ள முக்கிய தடை பணம் அல்ல என்றும், அது தொடர்பான சட்ட விதிகளில் உள்ள சிக்கலே என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்த சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக தற்போது பாராளுமன்ற குழுவொன்று செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தேவையான சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கத்தால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘இந்த அரசாங்கம் எட்டு மாதங்களுக்குள் ஏற்கனவே இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது. அரசியலமைப்பிற்கு அமைவாக மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து மாகாண சபை தேர்தலை நடத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்,’ என்று அவர் கூறினார்.
தேர்தலுக்கான பணம் ஒதுக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, தேவை ஏற்பட்டால் துணை மதிப்பீடு ஒன்றின் மூலம் அதற்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு சுட்டிக்காட்டினார்.

