வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ ‘பங்களா முன்பாக இன்று (29) போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை
சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது
சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி
உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு
வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல
வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள்
விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு
வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக
காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினமும்
கறுப்புக்கொடிகளைத் தாங்கியவாறு பலாலி சந்திவரை ஊர்வலமாக
போராட்டத்தை முன்னடுத்தனர்.
கறுப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரை பேரணியாக
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறிதரன், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன்
வலி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோரும்
பங்குபற்றிருந்தனர்.

