Tuesday, September 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

உடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண்
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர்,  விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை
அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில்,  பாதுகாப்பற்ற மின் கசிவில்
சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி
உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த,  இரண்டு பிள்ளைகளின் தாயாரான
நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே நேற்று இவ்வாறு (30) உயிரிழந்துள்ளார்.

அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில்
பங்கேற்பதற்காக,  உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும்
ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப்ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன்
தொடர்புற்றதால்,  அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு,  தெல்லிப்பளை
ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர்
உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில்,  இரண்டு
பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு
பரிதாபமாக உயிரிழந்தமை அவரது குடும்பத்தினரையும்,  சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments