முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்
கொண்டிருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் நுழைந்த நபர் ஒருவர்,
யன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகைகளை
கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில்இ மதிலேறி வளவுக்குள்
நுழைந்த சந்தேகநபர், நேற்று அதிகாலை 2.20 மணி வரை வீட்டுக்குள் நுழைவதற்கு
முயற்சித்துள்ளதாக cctv காணொளி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர்,
சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51, 000 ரூபாய் பணம் மற்றும் இரண்டு பவுண்
தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.
பின்னர் வீட்டுக்குள் சந்தேகநபர் நடமாடுவதை உணர்ந்த வீட்டில் இருந்தவர்கள்
கூச்சலிட்டதையடுத்துஇ அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல்
வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர். எனினும், சந்தேகநபரை இதுவரை கைது செய்ய
முடியவில்லை.
இதேவேளை, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை
அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியுள்ளனர்.
சந்தேகநபரை அடையாளம் காணும் பட்சத்தில், அருகிலுள்ள பொலிஸ்
நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரை மூன்று தினங்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துச் சென்றதாக வீட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

