சசிகுமாரும், உன்னி முகுந்தனும் நண்பர்கள். உன்னி முகுந்தனின் விசுவாசி சூரி.
இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் சம்பவங்களும்,
அது தொடர்பான கதையாடல்களும் தான் ‘கருடன்’ படத்தின் மையப்புள்ளி’ என
படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் மண் சார்ந்த படைப்புகளை தெரிவு செய்து திரையில் வழங்குவதில் நிபுணர்களாக திகழும் சசிகுமார் -சூரி -உன்னி முகுந்தன் ஆகியோர் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ திரைப்படம் இம்மாதம் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
இயக்குநர் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி,வடிவுக்கரசி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, மைம் கோபி, துஷ்யந்த் ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமப்புற பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சங்களாக சண்டை காட்சிகளும் பின்னணி இசையும் நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பும் இயல்பான உரையாடல்களும் என ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறோம் என இயக்குநர் துரை. செந்தில்குமார் தெரிவித்தார்

