Thursday, February 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாமிமலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் வைத்தியசாலையில்

சாமிமலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை,  கவரவில தோட்டத்தில்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர்,  இன்று (11) காலை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தால் 8 தொழிலாளர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டமைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது
தீவிரமடைந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் பணியாற்றும் 8 தொழிலாளர்களின் சேவையைத் தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காத காரணத்தினால்,  நேற்றைய தினம் (10) முதல் இவர்கள் தமது போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினர்.

இந்நிலையில்,  உண்ணாவிரதத்தின் தாக்கம் காரணமாக இன்று காலை
மூன்று தொழிலாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர்.

இதனையடுத்து,  அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தித் தேயிலை பறிக்கும் பணிகளை மேற்கொள்ளத் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நிர்வாகத்தின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த காரணத்தினாலேயே, 8 தொழிலாளர்களின் சேவையும் தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டதாகத்
தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்,
இதனால் தாம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்
அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தோட்ட நிர்வாகத்துடன்
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து,  குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் பணிக்குத்
திரும்புமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும்,
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட கடந்த 48 நாட்களுக்கான நிலுவைச் சம்பளம்
அல்லது அதற்கான உரிய நஷ்டஈடு தொடர்பில் நிர்வாகம் எவ்வித உறுதியான
தீர்வுகளையும் வழங்கவில்லை எனத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘எங்களை மீண்டும் வேலையில் சேர்த்தால் மட்டும் போதாது,  அநியாயமாகப்
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான உரியத் தீர்வு வேண்டும்’ என
வலியுறுத்தித் தொழிலாளர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments