நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக
11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (15) காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை
மாவட்டத்தின் ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும்
மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின்
பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவு ஆகியவை அதிக அவதான நிலையில்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை,மாத்தறை,
மொனராகலை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களின் பல பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் தும்பனை, யட்டிநுவர, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ
உள்ளிட்ட பல பிரதேசங்கள் அபாய வலயங்களாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கேகாலை மாவட்டத்தின்
அரநாயக்க, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளும் எச்சரிக்கை
வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

