யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்காக எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதி
அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அபினவ நிவஹல் பெரமுன’வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல்
செய்யப்பட்ட இந்த மனு, இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் தரப்பின் சட்டத்தரணி அசோக் பரன், மனுவை விரைவில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அருகாமையிலான திகதி
வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேவேளைஇ எதிர்மனுதாரரான
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான
சட்டத்தரணி சேனானி தயாரத்னவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த மனு மீதான விசாரணையை ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும்
எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க வைத்தியராக பணியாற்றிய ஒருவர் பாராளுமன்றத்திற்கு
தெரிவு செய்யப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்பதுடன்,
அது தகைமையீனமாகும் என மனுதாரர் தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

