கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை
இந்திய பிரஜை ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூபாய் 23 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஷ்’ போதைப்பொருள்
தொகுதியைக் இலங்கைக்குக் கொண்டு வந்த இந்திய பிரஜையே
இன்று (07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போதைப்பொருள் தொகையை விமான நிலையத்திலிருந்து வெளியே
கொண்டு செல்ல முயன்றபோது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட
சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த
37 வயதுடைய வர்த்தகராவார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபரான இந்திய பிரஜை இன்று
அதிகாலை 12 மணியளவில் மலேசியா கோலாலம்பூரிலிருந்து வந்த விமானம் மூலம்
கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதியை சோதனையிட்டபோது, புளி மிட்டாய்கள்
உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 4 தகரப் பெட்டிகளுக்குள் மிகவும் நுட்பமாக
மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் 102 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள்
கண்பிடிடக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மேலும் 6 டொபி பாக்கெட்டுகளுக்குள் டொபி வடிவில்
தயாரிக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 260 கிராம் ‘ஹசீஷ்’ போதைப்பொருளும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் போதைப்பொருள் தொகுதியும் இன்று
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.

