நாவலப்பிட்டி, குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பாய பிரதேசத்தில் உள்ள
தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக
குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது இன்றைய தினம் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீ பரவலின் போது தொழிற்சாலையினுள் உரிமையாளரும் பணியாளர்களும் இருந்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலின் போது தொழிற்சாலையினுள் இருந்த தேயிலை பொதிகள் கருகியுள்ளது.
கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இந்த தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான
மேலதிக விசாரணைகளை குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

