Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூதூர் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குமாரபுரத்தைச் சேர்ந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிசாரினால் குமாரபுரம் பகுதியில் வைத்து 6 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நாகராசா லிங்கேஸ்வரன் என்பவரே கைது செய்யப்பட்டு பின்னர்
பொலிசாரினால் தாக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறித்த நபர் மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நேற்று(08) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் 24.02.2025 அன்று ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த குறித்த நபரே கடந்த வெள்ளிக்கிழமை (07) மூதூர் பொலிசாரினால் குமாரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் சட்டத்திற்கு முரனாண வகையிலும்,  அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாகவும்,  தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி அவரது மனைவியினால் வெள்ளிக்கிழமை (07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் பின்னர் குறித்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.

கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர்
ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமது கிராமத்திற்குள் நுழைந்து
தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும் இதன்போது தமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிசார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும்,  குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இரு தரப்பிலும் சிலரை தேடியும் வந்தார்கள்.

பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (07) பாலர்பாடசாலையில் பிள்ளையை விட்டு திரும்பி வரும் வழியில் மூதூர் பொலிசார் தனது கணவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று தலை,  கை,  கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் குமாரபுரம் மக்கள்மீது தமது அதிகாரத்தை பிரயோகித்து ஒரு பக்கச்சார்பாக பொலிசார் நடந்து கொள்வதாகவும் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திருமதி லிங்கேஸ்வரன் முனீஸ்வரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments