இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர்
டேவிட் லம்மியுடன் ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (17.02.2026) முற்பகல் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போதும், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும் ஐக்கிய இராச்சியம் வழங்கிய
ஒத்துழைப்புகளுக்கும் குறிப்பாக, இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக
விதிக்கப்பட்டிருந்த வரிச்சலுகைகளை நீக்கி பிரித்தானியா வழங்கிய
விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து இதன்போது
மகிழ்ச்சி வெளியிட்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர், குறிப்பாக வரி
அறவீட்டுச் செயற்பாடு உள்ளிட்ட புதிய பொருளாதாரத் திட்டங்களைப்
பாராட்டியுள்ளார்.
அத்துடன், பசுமை எரிசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக
இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்கு
பிரித்தானியாவின் ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
‘டிக்வா’ சூறாவளி காரணமாக இலங்கை முகங்கொடுத்த வேதனையான அனுபவங்கள் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்த பிரதிப் பிரதமர், இந்த சவால்களை முறியடித்து இலங்கை மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

