யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,
மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம்
மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும்
முன்னெடுக்க வேண்டும்.
வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் ஒலி எழுப்பப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்று வருகிறது.
அதிக ஒலி எழுப்பப்பட்டால் கிராம அலுவலர் ஊடாக அதனை கட்டுப்படுத்தும்
பொறுப்பினை பிரதேச செயலாளர்கள் ஏற்க வேண்டும்.மீறுவோர்கள் மீது
கிராம அலுவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்தல், குப்பைகளை எரிவூட்டுவதனால் வளி மாசடைதல் மற்றும் வாணவேடிக்கைகயால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

