ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம்
தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று (27) அதிகாலை தப்பியோடிய
சந்தேகநபர், சில மணித்தியாலங்களுக்குள் குறித்த பிரதேச தோட்டம் ஒன்றில்
பதுங்கியிருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வயோதிப தம்பதியினர்
கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர் கைது
செய்யப்பட்டிருந்தார்.
அவர் கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிறைச்சாலை
அதிகாரிகளினால் நேற்று (26) இரவு கண்டி தேசிய வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியிருந்ததுடன், அவரைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதற்கமைய செயற்பட்ட ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், பொகவந்தலாவ ‘
பெட்ரசோ’ தோட்டத்தில் பதுங்கியிருந்த சந்தேகநபரை மீண்டும் கைது செய்து
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை
மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானும்
உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சந்தேகநபர், தனது
மனைவி தூண்டியதன் பேரில், அவர் பெற்றிருந்த கடன் தொகையொன்றை
செலுத்துவதற்காகவே இந்த இரட்டைக் கொலையையும் கொள்ளையையும்
செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, தான் எப்படியாவது சிறையிலிருந்து விடுதலையாகி வந்த
பின்னர், இந்த குற்றத்தைச் செய்ய தன்னைத் தூண்டிய தனது மனைவியையும்
நிச்சயமாகக் கொலை செய்யப் போவதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் இந்த வாக்குமூலத்தை அடுத்து, அவரது மனைவியின் பாதுகாப்பைக்
கருத்திற்கொண்டு உடனடியாகச் செயற்பட்ட பொகவந்தலாவ பொலிஸார்,
இன்று (27) பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு
உத்தரவிட்டுள்ளனர்

