பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான
‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம்
கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில்
முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர்
இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார்
பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட பிராந்திய
கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத் தலைவர் உள்ளிட்ட
பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான
பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம்
மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால்
மானியமாக வழங்கப்படுகின்றது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன்
இரண்டு தனியார் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

