முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட
லண்டன் பயணத்தின்போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை
எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பயணச் செலவில் பாதியளவு போக்குவரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டதாகவும், போக்குவரத்து வசதியை பிரித்தானிய அரசாங்கமே வழங்கியதாகவும் தெரிவித்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி
செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீது, அரச நிதியைப் பயன்படுத்தி
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டதன் மூலம் அரசுக்கு 1.5 கோடி ரூபாவிற்கும்
அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

