நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76, 044 ஆக
அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (19) மட்டும் 2, 652 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 162
சுகாதார வைத்திய அலுவலர் பிரிவுகள் அதிக அபாய மண்டலங்களாக
அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக டெங்கு பரவல் வேகமடைந்துள்ள நிலையில்,
மே மாதத்தில் 8,590 பேரும், ஜூன் மாதத்தில் 21,537 பேரும், ஜூலை மாதத்தின்
முதல் 19 நாட்களில் மட்டும் 20இ666 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் டெங்கு காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு
விகிதம் 0.07 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் அடிப்படையில், மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 40,009
நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளிகளில் 52.61
சதவீதமாகும். தெற்கு மாகாணத்தில் 11,707 பேரும், மத்திய மாகாணத்தில்
6,431 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக கம்பஹா மாவட்டத்தில் 15,910 பேரும், கொழும்பு மாவட்டத்தில்
15,110 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,330 பேரும், கண்டி மாவட்டத்தில்
5,111 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,010 பேரும் டெங்கு நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரிக்கும்
அபாயம் உள்ளதால், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், காய்ச்சல்
உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய
சிகிச்சையை நாடவும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம்
வலியுறுத்தியுள்ளனர்

