Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் உறுதி

கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் உறுதி

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச்
சாத்தியமானதும் விரைவானதுமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று
(14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில்
நடைபெற்ற கூட்டத்திற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை
தாங்கினார்.

அம்பாறை மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துதல், மீனவர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை
உறுதிப்படுத்துதல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள
கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும்,  அவற்றை
முற்றாக ஒழிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்
சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஒலுவில் துறைமுகத்தை முழுமையான மீன்பிடித் துறைமுகமாக
அபிவிருத்தி செய்வதுடன்,  துறைமுக வாயிலில் குவிந்துள்ள மண்ணை அகற்றி
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர்இ சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு
விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார்.

ஒலுவில் துறைமுக அபிவிருத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும்,  அவர்களின் பங்களிப்புடன்
துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன்,  மீனவர்களுக்குத் தேவையான
அத்தியாவசிய வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அமைச்சர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன்,
கடற்றொழில் துறையை நிலையானதும் இலாபகரமானதுமாக மாற்றுவதற்கான
பல முக்கிய தீர்மானங்களும் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments