முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட
பிரதிவாதிகள் தொடர்பான வழக்கை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று கொழும்பு கறுவாத்தோட்டம்
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணைகளை மேற்கொண்டு வரும் கறுவாத்தோட்டம்
பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
மேலதிக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை
ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, வழக்கை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு
உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம்
தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

