இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகளவான மாற்றுத்திறனாளிகள்
காணப்படுவது யுத்தத்தினால் ஏற்பட்ட கவலைக்குரிய விடயமாகும் என
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய
பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள்
வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில்
நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கி வைத்து, உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
மேலும் உரையாற்றுகையில்,
வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் வெற்றிகொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ள நீங்கள் அனைவரும் விசேட
மானவர்கள். உங்களின் துணிச்சலுக்கும் சளைக்காத ஆற்றலுக்கும் வலுவூட்டும்
வகையிலேயே ஜனாதிபதி நிதியத்தினூடாக இந்த உதவிக் கரங்களை
நீட்டியுள்ளோம். நீங்கள் ஏனைய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு சிறந்த
முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலுமே அதிகளவான மாற்றுத்திறனாளிகள்
காணப்படுவது யுத்தத்தினால் ஏற்பட்ட கவலைக்குரிய விடயமாகும். மீண்டும்
ஒருமுறை இவ்வாறானதொரு யுத்தம் ஏற்படாத வகையில், அதற்கான
காரணிகளை இல்லாதொழிக்கும் பொறுப்புள்ள அரசாங்கமாகப் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நாம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்து வருகின்றோம்.
மக்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருந்த ஜனாதிபதி நிதியத்தை,
மக்களுக்கான நெருக்கமான நிலைக்குக் கொண்டுவந்து தேவையானவர்களுக்கு
உதவி செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள்
முன்னெடுத்துள்ளார். இது சலுகைகளை அனுபவிப்பவர்களுக்கானது என்ற
வரலாற்றை மாற்றி, உண்மையான தேவை உள்ளவர்களுக்காக இந்த நிதியம்
இன்று செயற்பாட்டு ரீதியில் இயங்குகிறது.
கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துஇ முன்பள்ளி முதல் மேற்படிப்பு
வரை ஜனாதிபதி நிதியத்தினூடாகப் பெரும் உதவிகளைச் செய்து வருகின்றோம்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் சமத்துவமான நிலை கிடைப்பதும், அது சமூகத்தின்
கருத்தாக நிலைநிறுத்தப்படுவதும் மிக முக்கியமாகும். உங்களை இந்நிலைக்கு
உயர்த்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது நன்றிகள் எனத்
தெரிவித்தார்.

