தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் இன்று லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ , ‘சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்’
மற்றும் பல தமிழ் தேசிய அமைப்புகளின் ஏற்பாட்டில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமிழீழத் தேசியக் கொடிகளையும், கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியவாறு , ‘நீதியும் சுயநிர்ணயமும் தமிழீழத்திற்கே!’ என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து தங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழீழப் பகுதிகளில்
சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு
உடனடியாக நடத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப்
பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும்
இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும்,
தமிழர்களின் பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், நினைவேந்தல்
உரிமை மற்றும் கலாச்சார உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட
வேண்டும்இ ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொடர்ச்சியான
அரசியல் ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறலும்,
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் போன்று
ஐந்து பிரதான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டன.
‘எங்கள் நிலம், எங்கள் மக்கள், எங்கள் உரிமை’ என்ற வாசகங்கள் அடங்கிய
பதாகைகளை ஏந்தியவாறு இளையோர் முதல் முதியோர் வரை பெருந்திரளான
மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரங்களை விளக்கும் துண்டுப்
பிரசுரங்களும், பிரித்தானிய அரசாங்கம் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு
ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இப்போராட்ட களத்தில்
வலியுறுத்தப்பட்டன.

