சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு
கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத பயணிகளுக்கான
‘பசுமை பாதை’ ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற
போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சீன நாட்டைச்
சேர்ந்த ஒரு தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் சீனாவில் இருந்து தாய்லாந்தின் பெங்காக் நகருக்கு வந்து, அங்கிருந்து
தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, அவர் கொண்டு வந்த
பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பு சிகரெட்டுகள்
88, 000 அடங்கிய 440 சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை சுங்க அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

