நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழப்புகள்
ஏற்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்துள்ள
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தச் சம்பவம் குறித்து சுயாதீனமான
மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச,
இந்த அமைதியின்மையால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறைச்சாலை நிர்வாகத்தின் சீர்குலைவையும், நிறுவன ரீதியான திறமையின்மையையுமே சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கங்களே
பொறுப்புக்கூற வேண்டும் எனத் தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில்
இருந்தபோது வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சம்பவத்திற்குத்
தற்போதைய நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முறைமை மாற்றத்தை வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது
எனத் தெரிவித்த பிரேமதாச, நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தற்போதைய
முறைமையின் தொடர்ச்சியான தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வாதிட்டார். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதிலும், சிறைச்சாலை நிர்வாகத்தை வினைத்திறனுடன் முன்னெடுப்பதிலும் அரசாங்கத்தின் ஆற்றல் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
மனிதாபிமான அடிப்படையிலான சிறைச்சாலை முகாமைத்துவ முறைமையைப் பேண முடியாமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் இந்தச் சம்பவத்தின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதால், இது தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

