தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது
நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்
இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள்
தற்போது நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 11 அன்று இடம்பெற்ற இத்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
உயிரிழந்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, செப்டம்பர் 11 அன்று அதிகாலை சுமார்
3.00 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெஹிவளை சிரிசங்கபோ
மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினார்.
சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காட்சி
சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வீட்டின் முன் கதவைத் தட்டியதாகவும், வீட்டில் இருந்தவர்கள் கதவைத்
திறந்ததும் உள்ளே கைக்குண்டு ஒன்றை வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்புச் சம்பவத்தில், வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய
இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்

