Friday, October 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமல் ராஜபக்ஷவின் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு

நாமல் ராஜபக்ஷவின் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டிய
15 மில்லியன் ரூபாயை தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம்
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழு
தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து இதுவரை சட்டமா
அதிபரிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி
மோசடி விசாரணைப் பிரிவு இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு
அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை 2016 ஆம்
ஆண்டு நிறைவு செய்யப்பட்டு,  சாட்சியங்களின் கோவைகள் சட்டமா அதிபருக்கு
அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம,
நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகிய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு,
கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும்,  வழக்கு
நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை எவ்வித ஆலோசனைகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இதற்கமைய,  இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும்
விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,  அன்றைய தினம் சட்டமா
அதிபரின் ஆலோசனைகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை
அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments