TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நேரத்தில் பயனாளர்கள்
பெருமளவில் பிரவேசித்தமையினால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்
ஒன்லைன் தொகுதி மற்றும் வருமான வரி கட்டுப்பாட்டு தகவல் முறைமை
தற்காலிகமாக மந்தகதியடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர்
நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் அதிகளவிலான மக்கள் ஒரே
நேரத்தில் முறைமைக்குள் நுழைய முயன்றமையால் ஆன்லைன் தொகுதிக்கு
கணிசமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், முறைமை முழுமையாக முடங்கியுள்ளதாக வெளியாகும் செய்திகளை
நிராகரித்த அவர், சில தாமதங்கள் ஏற்பட்ட போதிலும் முறைமை தொடர்ந்து
இயங்கி வருவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒன்லைன் முறைமை முடங்கவில்லை. ஆனால் அதிகளவிலான மக்கள் ஒரே
நேரத்தில் முறைமைக்குள் நுழைய முயன்றதால் ஒரு மந்தநிலை ஏற்பட்டது என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தங்களால் இன்னமும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள முறைமைக்குள் பிரவேசிக்க முடியவில்லையென பொதுமக்கள் தொடர்ந்து விசனம் தெரிவித்து வருகின்றனர்.
திணைக்களத்தினால் அதிகளவிலான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், அதுவும் முறைமைக்கு மேலதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

