தேனியில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகர் ஜீவாஇ செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள திரையுலகில் ஏற்பட்டுள்ள பாலியல் புகார் பிரச்சனை குறித்த செய்தியாளரின் கேள்வியால் டென்ஷன் ஆன ஜீவா, ‘அறிவு இருக்கா?’ எனக் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஈஇ ராம், என்றென்றும் புன்னகை, முகமூடி, ஜிப்ஸி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜீவா. தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். ஜீவா நடித்த ‘பிளாக்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.
பாலசுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க தேனி வந்த நடிகர் ஜீவாஇ ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்துஇ செய்தியாளர்கள் நடிகர் ஜீவாவிடம் கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கேரளாவைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் சர்ச்சை இல்லை எனவும், இந்த கேள்விக்கு ஏற்கனவே தான் பதில் அளித்திருப்பதாகவும், நல்ல நிகழ்விற்கு வந்த தன்னிடம் இது போன்ற அபசகுனமான கேள்விகளை கேட்க வேண்டாம் எனக் கூறினார்.
‘நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து கேரள திரையுலகில் எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டோம்’ என்று செய்தியாளர் கேட்டதற்கு கோபமடைந்த நடிகர் ஜீவா, ‘திரும்ப திரும்ப பதில் சொல்ல முடியாது.. உனக்கு அறிவு இருக்கா?’ என ஒருமையில் பேசினார்.
இதனால் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை சமாதானப்படுத்தி பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

