Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்: பிரித்தானிய எம்பி கோரிக்கை

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்: பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள்
தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை
கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின்,
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர்
டேம் சியோபைன் மெக்டோனா கோரியுள்ளார்.

யாழ். செம்மணி மனித புதைகுழி தொடர்பில்,  லண்டனில் உள்ள பிரித்தானிய
நாடாளுமன்றின் கிளைக்கட்டிடத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின்
தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,  குறித்த அறிக்கையில்,  ‘ஒரு மனித புதைகுழி தோண்டுதல் பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த வலி மற்றும் மௌனத்தை எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலையில், லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச
தமிழ் பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையில் ஈடுபட்டதற்காகவும்,  அவரைத் தேட வந்த நான்கு பேரின்
கொலைகளிலும் ஈடுபட்டதற்காகவும் விசாரணை செய்யப்பட்டு தண்டனை
விதிக்கப்பட்டது.

அவர் விசாரணையின் போது, ​​செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு மனித புதைகுழியில்
சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதில் தனது
பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி தோண்டலின் இரண்டாம்
கட்டத்தின் 4ஆவது நாளில்இ குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட பல மனித
எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில்இ யுனிசெஃப் விநியோகித்த வகையான தனித்துவமான நீல நிற பாடசாலை
பையுடன் ஒரு குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. இதுவரை,
அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அரசாங்க நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக,  மனித உரிமை ஆர்வலர்கள் இந்த எலும்புக்கூடுகளை ஆதாரங்கள் சிதைத்து அழிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

2021இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1இன் படி,  இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்க,  ஒருங்கிணைக்க,  பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது.

ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. 1998இல்
சோமரத்ன ராஜபக்சேவின் சாட்சியம் பல செய்தி நிறுவனங்கள் மற்றும்
மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டதிலிருந்து,
செம்மணியில் ஒரு மனித புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. இருப்பினும்,  இப்போதுதான் அது தோண்டப்பட்டு வருகிறது.

இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இலங்கையில் உள்ள
ஐ.நா. அலுவலகம், கல்லறைத் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு,  ஒருங்கிணைக்கப்பட்டு,  பகுப்பாய்வு செய்யப்பட்டு,  46/1 தீர்மானத்தின் கட்டளைக்குள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் 46/1இன் இணை
அனுசரணையாளராகவும்,  இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு
வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும்,  பிரித்தானியா இந்த பிரச்சினையில்
முன்னிலை வகிக்க வேண்டும்.

செம்மணி படுகொலையின் குற்றவாளிகள் மற்றும் அதைப் போன்றவர்கள்
அடையாளம் காணப்பட்டு,  விசாரிக்கப்பட்டு,  நீதியின் முன் நிறுத்தப்படுவதை
உறுதிசெய்ய இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் உள்ளபடி,  இது சர்வதேச சமூகத்தின்
பொறுப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments