Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். பெண் விரிவுரையாளர் கொலை

யாழ். பெண் விரிவுரையாளர் கொலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர்
ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட
அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது.

இக்கொலைச் சடலம் யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்
உள்ள புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்ற
விரிவுரையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகனுக்கும் அவரது மனைவிக்கும்
இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த
நிலையில், தனது தாயையும் (விரிவுரையாளர்) தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது
வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் ஓடு கழற்றப்பட்டு
கயிறு மூலம் யாரோ வெளியேறியதற்கான தடயங்களும்இ வெட்டப்பட்ட
தலைமுடிகளும் கண்டறியப்பட்டன.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் பரந்தன்
பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தமையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமையும் QR குறியீடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சி.சி.ரி.வி காட்சிகளை அடிப்படையாகக்
கொண்டு விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், நேற்று
திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் (மருமகன்),
19 வயதுடைய அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது
செய்தனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில்,
தனது மாமியாரான விரிவுரையாளரைத் தான் கழுத்து நெரித்துக் கொலை
செய்ததாக மருமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், சடலத்தைத்
தனங்கிளப்பு – அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாகவும்
அவர் ஒப்புக்கொண்டார்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நீண்ட தேடுதலின் பின்னர்
விரிவுரையாளரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த
பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ளதால், பதில் நீதவான்
சடலத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments