2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை எதிர்வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கிளைகள் உட்பட திணைக்கள வளாகங்களில் சுமார் 1, 000, 000 இலக்கத் தகடுகள் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கிறது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட போதிலும், விண்ணப்பதாரர்களால் இதுவரை அவை பெற்றுக்கொள்ளப்படாததே இந்தத் தேக்கத்திற்குக் காரணமாகும்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தங்களது
இலக்கத் தகடுகளை நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள அந்தந்த மோட்டார் போக்குவரத்து திணைக்களக் கிளைகளுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் உடனடியாகப்
பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள திணைக்களம்இ
அவ்வாறு செய்யத் தவறினால் நிர்வாக ரீதியான தாமதங்கள் ஏற்படக்கூடும்
என உரிமையாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் அல்லது மேலதிக விபரங்களுக்கு, பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இலக்கத் தகடு பிரிவை 011-2033333 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

