மாரவில கடற்கரையில் இரு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சம்பவங்களில்
ஐந்து பேர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், 21 வயதான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (12) மாலை காணாமல் போன இளைஞர், குளியாப்பிட்டிய – அனுக்கனே
பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி
பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் உள்ளிட்ட ஏழு பேர் குளியாப்பிட்டியிலிருந்து மாரவில கடற்கரைக்கு
சுற்றுலா சென்றிருந்த நிலையில், கடற்கரையில் கற்கள் போடப்பட்டுள்ள
பகுதியில் மணல் திட்டின் மீது நின்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பாரிய
கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரை காப்பாற்ற பிரதேசவாசிகள் முயற்சித்த போதிலும், அதற்குள் அவர்
கடலில் காணாமல் போயுள்ளார். அவரை காப்பாற்றச் சென்ற மற்றொரு
இளைஞரும் கடலில் சிக்கிய நிலையில் , அதிர்ஷ்டவசமாக உயிருடன்
மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அதே பகுதியில் நேற்று மாலை கடல் அலையில் சிக்கிய மூன்று
பெண்களையும் பிரதேசவாசிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் நடவடிக்கை இன்று (13) முதல்
இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரின் பங்களிப்புடன்
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, குறித்த பகுதியில் மாத்திரம் இதுவரை 21 பேர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

