Friday, October 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை: காரின் சாரதி கைது

சொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை: காரின் சாரதி கைது

கல்கிஸ்ஸை,  சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சாரதி
லுனாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸ் அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் களனி – பட்டிய சந்தியைச் சேர்ந்த
40 வயதுடையவராவார்.

கல்கிஸ்ஸை பிராந்திய பொறுப்பதிகாரி தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சரின் பணிப்புரைக்கு இணங்க,  பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப்
பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட
விசாரணைகளின் போதே பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 20 ஆம் திகதி சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின்
உரிமையாளரை மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் சுட்டுக்கொன்றிருந்தனர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும்
பாரியளவான அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ரத்மலானே குடு
அஞ்சு’ என்பவரின் நெருங்கிய ஆதரவாளரான ஜயவர்தன கோட்டகே ரூவன் குமார
என்பவரே வெளிநாட்டில் இருந்து இச்சம்பவத்தைக் திட்டமிட்டுள்ளமை
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன்,  இக்குற்றச் செயலைத் திட்டமிடுவதற்காக அவர் இதற்கு முன்னர்
ஒருமுறை நாட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு சென்றுள்ளமை
தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

ரூவன் குமார வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக,  குறித்த சந்தேகநபர்
குற்றச் செயலுக்கு முந்தைய நாள் ஹோமாகம பகுதியில் உள்ள குடியிருப்பு
தொகுதி ஒன்றின் வாகன நிறுத்தத்திற்குச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மின்கலன் பழுதாகியிருந்ததால்இ
அன்றைய தினம் குற்றச் செயலை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

இதற்காக ரூவன் குமார,  சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு
100, 000 ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுநாள்,  அதாவது 20 ஆம் திகதி,  பேலியகொடை பகுதியில் இருந்து மீண்டும்
ஹோமாகமவிற்கு வந்த சந்தேகநபர்,  போலியான இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்த குறித்த மோட்டார் வாகனத்தில் கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஊடாக மொரட்டுவை,  கட்டுபெத்த பகுதிக்குச் சென்றுள்ளார்.

பின்னர்,  கட்டுபெத்த நடைபாதை அருகே துப்பாக்கிதாரியும் மற்றொரு நபரும் துப்பாக்கியுடன் அந்த மோட்டார் வாகனத்தில் ஏறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் சொய்சாபுர பகுதிக்குச் சென்று குறித்த ஹோட்டல் உரிமையாளரைச் சுட்டுக்கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயலைத் தொடர்ந்து,  ரூவன் குமார,  சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு
மேலும் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ‘மோதர நவீன்’ மற்றும் ‘வெல்லே சாரங்க’ போன்ற
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப்
பேணியவர் எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (29) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதுடன்,  இச்சம்பவம்
குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments