Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

சாவகச்சேரி நகரசபையில்,  தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை
நீக்கக் கோரியும்,  புதிய சட்ட வரைபிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று
தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு விரோதமாகவும்,  அடிப்படை மனித உரிமைகளை மீறும்
வகையிலும் அமைந்துள்ள தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை
முழுமையாக நீக்க வேண்டும்.

அத்துடன்,  புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட
வரைபையும் அரசு மீளப் பெற வேண்டும். அடிப்படையில் எவ்விதமான
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் நாட்டுக்குத் தேவையில்லை எனத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடூரமான இச்சட்டத்தின் பாதிப்புகளை மக்கள் நேரடியாக அனுபவித்துள்ளதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு,  அதன் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ்
தலைமையில் இன்று நடைபெற்றது.

சபையின் உபதவிசாளர் ஞா. கிஷோர்,  பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு
எதிரான இந்தப் பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத ஒரு விடயத்தைச் சபையில் விவாதிக்கக் கூடாது எனத் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

எனினும்,  அந்த மூன்று உறுப்பினர்களைத் தவிர்த்து, சபையிலிருந்த ஏனைய
அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தப் பிரேரணை வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments