வெலிசர இடைத்தங்கல் முகாமில் இருந்து தப்பியோடி, பொரலஸ்கமுவ பகுதியில்
வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்தவாறு
இணைய வழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இன்று (07) கைது செய்துள்ளது.
21 சீனர்கள் (2 யுவதிகள் உட்பட) மற்றும் 9 வியட்நாமியர்கள் (ஒரு யுவதி உட்பட).
10 கணினிகள், 29 ஆப்பிள் அலைபேசிகள் மற்றும் இணையத் தொடர்பு
உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி 152 வெளிநாட்டவர்கள் இணைய மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் உள்ளடங்கியிருந்த இந்த 30 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பியோடியே இவர்கள் மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் உள்ள இருமாடி கட்டிடம் ஒன்றின்
மேல் தளத்தை மாதந்தோறும் 15 இலட்சம் ரூபாய் அதிக வாடகைக்கு எடுத்து
இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட எவரிடமும் கடவுச்சீட்டோ அல்லது விசா அனுமதிப்பத்திரமோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்
பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

