தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது
கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில்
கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளைஇ சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது
இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர்
கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்.
இதற்காகச் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் விதம் அங்கிருந்த
சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது.
சந்தேகநபர் வீட்டின் கதவைத் தட்டியதுடன், வீட்டிலுள்ளவர்கள் கதவைத்
திறந்தவுடன் வீட்டின் உள்ளே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப்
பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் தூங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு பிள்ளைகளும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் அவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான இடத்திற்குரிய நீதவான் விசாரணை இன்று காலை
மேற்கொள்ளப்பட்டது.
குண்டுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

