Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமலுக்கு லண்டனில் நடப்பதற்கோ தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பல்ல

நாமலுக்கு லண்டனில் நடப்பதற்கோ தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பல்ல

‘நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கோ அல்லது
அங்கு அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடப்பதற்கோ தேசிய மக்கள் சக்தி
அரசு பொறுப்பல்ல.’ என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லண்டன் பயணத்தின் போது நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் புலம்பெயர்
அமைப்புகள் முன்னெடுத்து வரும் எதிர்ப்புகள் மற்றும் கேம்பிரிட்ஜ் உரை
இரத்துச் செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கூறுகையில்:-

‘நாமல் ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கு இந்த அரசு எந்தத் தடையையும்
விதிக்கவில்லை. ஆனால்,  அவர் அங்கு செல்லும் போது மக்கள் ஏன்
கறுப்புக்கொடி காட்டுகின்றார்கள்,  ஏன் அவரது உரையை இரத்துச் செய்யச் சொல்கின்றார்கள் என்பதை அவர்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளின் விளைவைத்தான் இன்று
சர்வதேச ரீதியாக அறுவடை செய்கின்றார்கள். அதற்கும் எமது அரசுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை.

தமது தோல்விகளுக்கும்,  சர்வதேச ரீதியாகத் தமக்கு ஏற்படும் அவமானங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பழிபோடுவது ராஜபக்ஷக்களின் வழக்கமான பாணியாகிவிட்டது. லண்டனில் இருப்பவர்கள் தன்னிச்சையாகப் போராடுகின்றார்களே தவிர,  நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்கு செல்வாக்கு இல்லை என்பதை ராஜபக்ஷ தரப்பினர் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் லண்டனில் உரை நிகழ்த்துகின்றாரா,  இல்லையா என்பது எங்களுக்கு
ஒரு பொருட்டல்ல. அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள்
குறித்த விசாரணைகள் இங்கு சட்டப்படி தொடரும். வெளிநாடுகளில் தப்பித்து
ஓடி ஒளிந்தாலும்,  மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் தண்டனையிலிருந்து
தப்ப முடியாது.’ – என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments