அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்
சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் முதலை கடித்து இறந்தாரா? அல்லது தற்கொலையா அல்லது
கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அக்கரைப்பற்று பொலிசார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம், சுமார் 45 வயது முதல் 50 வயது மதிக்கத்தக்க
சடலத்தை அக்கரைப்பற்று பொலிசாருடன் இணைந்து அம்பாறை தடயவியல்
பிரிவு பொலிசார், பொதுமக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
அத்துடன் குறித்த நபர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும்
சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாகவம் பொலிஸார்
தெரிவித்தனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம்
காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல்போன நபர்கள் தொடர்பில்
எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள
பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

