வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால்
முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி
உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர்
உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில்
அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு துக்க தினம். இது ஒரு கறுப்பு தினம். எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு தினம். அன்று எமது இனம் எப்படி துடிதுடித்திருக்கும். எப்படி வேதனைப்பட்டிருக்கும். அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் என்று மலரும் என்று எனது மனம் தினம் தினம் ஏங்குகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன் காங்கிரஸ் கரம் நீட்டுகிறது என்றவுடன் இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.
அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி? என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

