ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த
அறிக்கையை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிக்கை ஒன்றை
வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன்
வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், யுத்தகால குற்றங்களுக்கான
பொறுப்புக்கூறலில் முன்னேற்றமின்மை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர்
விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் செம்மணி புதைகுழி
தொடர்பான கரிசனைகளை ஐ.நா. சுட்டிக்காட்டியமை வரவேற்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதை
ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதையும் தமிழரசு கட்சி அவதானித்துள்ளதாக
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசாங்கம் இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் பாதாள
உலகக் குழுக்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும்
புதிய அரசியலமைப்பு தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை
நடைமுறைப்படுத்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கம்
காட்டிவரும் இந்த மந்தபோக்கால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக
தமிழரசுக் கட்சி தெரிவிப்பதாகக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

