ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு, தமிழ்த் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே
அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியாகத் தனது
அரசியல் பயணத்தைத் தொடங்கிய சிவாஜிலிங்கம், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண சபை உறுப்பினர்இ நகரசபை உறுப்பினர் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் தமிழ்த் தேசிய அரசியலில் உறுதியாகச் செயற்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தனது பதவிப் பிரமாணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொண்டமையையும் சிறீதரன் நினைவுகூர்ந்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான
வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் இறுதிக்கிரியைகளை
நெருக்கடியான காலகட்டத்தில் முன்னின்று நடத்திய அவரது துணிச்சலையும்
அவர் பாராட்டியுள்ளார்.
தமிழர்களின் அரசியல் உரிமைகள், நீதி மற்றும் தேசிய அபிலாஷைகளுக்காக
இறுதிவரை குரல் கொடுத்த சிவாஜிலிங்கத்தின் மறைவு அவரது வாழ்வைப்
பூர்த்தி செய்தாலும், அவர் விதைத்த இலட்சியங்கள் தொடர வேண்டும் எனவும்
சிறீதரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ்த்
தேசியப் பற்றாளர்களுக்கு அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும்
தெரிவித்துள்ளார்.

